கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரியும் யுவதி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்தார்.
இவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்ததில்,
அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருவது தெரிய வந்தது. ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, குறித்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அவர் மறுத்ததால், சந்தேக நபர் அவளை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
மேலும், அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகவும், கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாகவும், ஆனால் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
(செய்திப் பின்னணி)
கம்பளை வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயிருந்தார்.
பேருந்தில் ஏறுவதற்கு வீட்டில் இருந்து வெலிகல்ல வரை சுமார் 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் அந்த வீதியின் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள எல்பிட்டிய பள்ளிவாசலின் சிசிடிவி கமெராவில் பாத்திமா வீதியில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.
அங்கிருந்து சுமார் 50 மீட்டருக்குப் பிறகு உள்ள சிசிடிவி கேமராவில் பாத்திமா நடந்து செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் உள்ளூர்வாசிகள் யாரும் அவளைப் பார்க்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கம்பளை, வெலிகல்ல, மகாவலி கங்கை மற்றும் அதனை அண்மித்த வனப்பகுதிகளில் கம்பளை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Be First to Comment