Press "Enter" to skip to content

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்க முடியும்

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கல்விசார் ஊழியர் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து, பல்கலைக்கழகக் கட்டமைப்பை பேணுவது மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவதே குறித்த கலந்துரையாடலின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் வெற்றிடங்களை இனங்கண்டு அவற்றை நிரப்புவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்தநிலையில், வருடாந்தம் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள கல்வி வசதிகள் போதுமானதாக இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய நிதி ஒதுக்கீடு வரம்புகளை முகாமைத்துவம் செய்து பல்கலைக்கழகக் கட்டமைப்பின் வசதிகளை மேம்படுத்துவது குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ, பொறியியல் மற்றும் விஞ்ஞான பீடங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை மீள வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளை பணித்துள்ளார்.

நாட்டின் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போதும்,  கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போதும், நவீன உலகிற்கு ஏற்றவாறு முறையான ஆலோசனைகளைப் பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *