மதங்கள் தொடர்பில் தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பாடசாலை படிப்பை முடித்தவுடன் அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கினார் என அவர் கல்விகற்ற புனித பீற்றர் கல்லூரியின் அதிபர் ரஞ்சித் பெரேரா தெரிவித்துள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பாடசாலை காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்ததாகவும், அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கலாம் எனவும் அதிபர் ரஞ்சித் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜெரோம் பெர்னாண்டோ ஆராதனையில் ஈடுபடும் கட்டுநாயக்க – வெயங்கொட வீதியிலுள்ள மிரக்கிள் டோம் எனும் கிறிஸ்தவ ஆலயத்தின் பெறுமதி சுமார் 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ள 4 ஏக்கர் இடத்தை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சபையின் உறுப்பினர்களான ஒரு தம்பதிகள் வாங்கிக்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், கல்கிஸை மற்றும் ஹெவ்லொக் சிட்டி போன்ற பகுதிகளிலும் போதகரின் பெயரால் 2 அடுக்குமாடி கட்டங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், லண்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஹொங்கொங், டுபாய், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் மக்களிடம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சபைக்கான உதவித் தொகை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சபைக்கு உதவித்தொகையாக செலுத்தக்கூடிய குறைந்தப்பட்ச தொகை ஐந்து இலட்சம் ரூபாய் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சபையினால் பெறப்படும் பணம் டுபாய், கட்டார் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Be First to Comment