Press "Enter" to skip to content

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெரொம்!

புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, இன்று (21) நாட்டுக்கு வருவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை.

எவ்வாறாயினும், சூம் தொழிநுட்பம் மூலம் இலங்கையில் நடைபெற்ற ஒரு பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களிடம் தனது கருத்தால் ஏற்பட்ட மன வருத்தத்திற்கு மன்னிப்பு கோருவதாகக் தெரிவித்தார்.

ஆனால் அன்றைய தினம் தான் கூறியது உண்மை என அவர் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புத்தர் மற்றும் பிற மதத்தினரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ போதகர் ஜெரொம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில் போதகர் ஜெரொம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்று இலங்கை திரும்புவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

எனினும், இது வரை அவர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய தினம் தொடர்பான ஞாயிறு ஆராதனை கட்டுநாயக்க மிரகல் டொம் மண்டபத்தில் நடைபெறாது என ஜெரொம் பெர்னாண்டோ தனது முகநூல் கணக்கில் நேற்று (20) பதிவு செய்துள்ளார்.

குறித்த ஆராதனை தெஹிவளையில் வேறொரு இடத்தில் இடம்பெறும் எனவும், சூம் தொழிநுட்பம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அந்த பதிவல் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் ஆராதனை இடம் மீண்டும் ஒருமுறை மாற்றப்பட்டதுடன், நுகேகொட பிரதேசத்தில் ஒரு இடத்தில் ஆராதனை இடம்பெறவுள்ளதாக ஜெரொம் பெர்னாண்டோவின் முகநூல் கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று பிற்பகல் அந்த இடத்தில் உரிய ஆராதனை இடம்பெற்றதுடன் சிங்கப்பூரில் இருந்து Zoom ஊடாக இணைந்த ஜெரொம் பெர்னாண்டோ தனது பக்தர்களிடம் உரையாற்றினார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை ஜெரோம் பெர்னாண்டோவிற்கு சொந்தமான கட்டுநாயக்க மிரகல் டோம் மண்டபத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *