அரசாங்கம் முன்மொழிந்துள்ள அனைத்து நபர்களையும் நினைவு கூருவதற்கான பொது நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன், பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு என்பதோடு போரை மேற்கொண்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே இடத்தில் நினைவு கூர முனைவதானது முரண்நகையாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூறுவதற்கான நினைவகத்தை நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாக கொழும்பு நகரில் பொருத்தமன இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்நிலையில் கருத்து வெளியிடும்போதே தமிழ்த் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,
முதலில் தென்னிலங்கைத் தலைவர்கள் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்களாயின் இவ்விதமான மரணங்கள் ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
ஆகவே மோசமான முறையில் நடத்தப்பட்ட போரினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டியது கட்டாயமானதாகின்றது.
அனைத்து மரணங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. படையில் உள்ள இராணுவ வீரர் போரில் மரணிப்பதற்கும், தாய் ஒருவர் படையினரிடத்தில் தனது மகனை ஒப்படைத்து விட்டதன் பின்னர் மரணிப்பதும், வலிந்து காணாமலாக்கப்படுவதும் முற்றிலும் மாறுபட்ட விடயங்களாகும்.
போரின் இறுதியில் படையினரின் அறிவிப்புக்கு அமைவாக இளைஞர் யுவதிகள் சரணடைந்துள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.
அதேநேரம் இந்த விடயத்தில் மரணங்கள் பொதுவானது என்று கூறினாலும், தமிழ் மக்கள் முகங்கொடுத்துள்ள மரணங்களும், இழப்புக்களும் அதிகமானவை. அவர்கள் மிகவும் அனுதாப நிலைமையில் உள்ளார்கள்.
ஆகவே, அவ்விதமான பாரிய இழப்புக்களைச் சந்தித்த மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி நினைவேந்தலைச் செய்வதற்குரிய சுதந்திரம் காணப்பட வேண்டும். அதனை கட்டுப்படுத்த முடியாது.
நினைவேந்தலைச் செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை உள்ளது. அது மதிக்கப்பட வேண்டும். அவர்கள் தாம் விரும்புகின்ற பகுதியில் ஒன்று கூடி நினைவேந்தலைச் செய்வதற்கு முழுமையான உரித்துடையவர்கள்.
ஆகவே அதனைத் தடுத்து நிறுத்தி பொதுத்தூபி அமைப்பதானது சட்டத்தின் பிரகாரம் தவறானது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மேலும் பாதிப்படையச்செய்யும் செயற்பாடாகவே கருதுகின்றோம்.
அந்த வகையில் பொதுத்தூபி அமைக்கப்படுவதையும், அங்கு தான் தமிழ் மக்கள் நினைவேந்தலைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த முனைவதையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வன் தெரிவிக்கையில்,
என்னைப்பொறுத்தவரையில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே பார்க்கின்றேன். இத்தனை ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்மறையாகச் சிந்தித்தவர்கள் தற்போது மாறுபட்டுச் சிந்திக்கின்றர்கள். இந்தச் சிந்தனையானது இதயசுத்தியுனானதாக இருக்க வேண்டும். என்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
பொதுநினைவுத்தூபியை அமைத்து அராசாங்கம் சர்வதேசத்திற்கு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று காண்பிப்பதற்கே முனைகின்றது.
அதேநேரம், இனப்படுகொலை புரிந்த படையினருக்கும், விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இனத்திலிருந்து மடிந்தவர்களுக்கும் ஒரே இடத்தில் நினைவேந்தலைச் செய்ய முடியாது. அது இயற்கைக்கும் முரணானது.
ஏற்கனவே, தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து அதற்கு பொறுப்புக்கூறலில் இருந்து விலகியிருக்கும் அரசாங்கம் தற்போது தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கின்றது.
அதுமட்டுன்றி நிலைiமாறுகால நீதிப்பொறிமுறையை மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமுலாக்க முனைவதாக அறிவித்த போதும் அதனைக் கூட நடைமுறைப்படுத்தாது காலத்தினை இழுத்தடித்து வருகின்றது.
தற்போது இழப்பீட்டு பணியகம், உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை நிறுவி சர்வதேசத்தினை ஏமாற்றுதற்கு முனைகின்றது.
அதன் தொடர்ச்சியாகவே நினைவுத்தூபி விடயத்தினை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றது. ஈற்றில் தமிழ் மக்களை அடக்குமுறையால் ஒற்றையாட்சிக்குள் நிர்வகிப்பதற்கு முனைகின்றது.
ஆகவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது மக்களுக்கான நினைவுத்தூபி கொழும்பில் அமைய முடியாது. அதுவொரு பொதுத்தூபியாக இருக்க முடியாது.
அதற்கு நாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை. எமது மக்களுக்கான நினைவேந்தல் தூபியானது முள்ளிவாய்க்காலில் தான் நிறுவப்பட வேண்டும் என்றார்.
புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவிக்கையில்,
படையினரையும், அவர்களால் கொல்லப்பட்ட பொதுமக்களையும் ஒரே இடத்தில் நினைவு கூருவதற்கு முயல்வதானது கேலிக்கூத்தான செயற்படாகும்.
இந்த முயற்சியானது, உள்நோக்கம் கொண்டது என்பதோடு பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நோகச் செய்யும் செயற்பாடாகும்.
இந்த செயற்பாட்டால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுவதானது வேடிக்கையானது.
குறித்த செயற்பாடானது இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை மேலும் வலுப்படுத்தி முறுகலையே தோற்றுவிக்கச் செய்யும் முயற்சியாகும்.
ஆகவே இவ்விதமான ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றார்.
ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,
அரசாங்கம் பொதுநினைவுத்தூபியை அமைப்பதன் ஊடாக பொதுமக்கள் தமது உறவுகளுக்காக தத்தமது பிரதேசங்களில் நினைவு கூரல் செயற்பாடுகளை முன்னெடுப்பதை தடுத்து நிறுத்துவதை பின்னணியில் கொண்ட கபடத்தனமான செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட எமது மக்கள் கொழும்பு வரை பயணித்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதும், தமது இழப்புக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய படையினருக்கும் அதே இடத்திலேயே நினைவு கூரலைச் செய்ய வேண்டும் என்பதும் வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சும் செயற்படாகும்.இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
அடக்குமுறைக்கு உள்ளாகிய இனமொன்று அடக்குமுறையிலிருந்து விடுதலையை அடைவதற்காக போராடியது. அந்தப்போராட்டத்தில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்துள்ளது.
ஆவ்விதமான தமிழினம், எவ்வாறு அடக்குமுறையை மிகமோசமான உரிமை மீறல்களைச் செய்வர்களுடன் இணைந்து தமது உறவுகளை நினைவு கூர முடியும்.
அதுமட்டமல்ல, தமிழினம் என்ன காரணங்களுக்காக விடுதலை கோரி போராடியதோ அந்தக் காரணங்கள் இன்னமும் முடிவுக்கு கொண்டுவரவில்லை.
அவை நாளுக்கு நாள் தீவிரமடைகின்றன. அவ்விதமானதொரு சூழலில் பொதுநினைவுத்தூபி நினைவுகூரல் என்பது சூட்சுமங்கள் நிறைந்ததொரு நகர்வாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அத்துடன், படையினர் தமக்கான நினைவுத்தூபிகளை அமைத்து அங்கு நினைவு கூரல்களைச் செய்கின்றார்கள். வெற்றி விழாக்களை நடத்துகின்றார்கள். அவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அந்த தரப்புடன் எவ்வாறு தமிழ் மக்கள் ஒன்றிணைய முடியும் என்றார்.
Be First to Comment