யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தையிட்டி விகாரை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கருத்தை முன்வைத்தார்.
அவ் விகாரை கட்டி முடிக்கும் வரை எவ்வித நடவடிக்கைகளையும மேற்கொள்ளாமல் கட்டி முடிக்கப்பட்ட பின் அகற்றுவது தொடர்பாக பேசுவதாக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் குறிப்பிட்டிருந்த நிலையில், குறித்த விகாரை கட்டும் வரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும் அவ் இடத்திற்கு எந்தவொரு தரப்பும் செல்ல அனுமதிக்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.
மேலும், ஏற்கனவே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இவ் விகாரைக்கு எதிராக தீர்மானம் எடுக்கப்பட்டு அத் தீர்மானம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி இன நல்லிணக்கம் தொடர்பில் தொடர்ந்தும் பேசி.வரும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் இன நல்லிணக்கம் தொடர்பில் பாதிப்பு ஏற்படுத்துமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் சுட்டிக்காட்டியிருந்தார்.
விகாரையின் பெயர்ப்பலகையில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட விகாரை என பொறிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் குறிப்பிட்ட நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் இவ் விகாரை இராணுவத்தினரின் தேவைக்காகக் கட்டப்பட்டது என குறிப்பிட்டிருந்ததாக வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட அறிக்கையில் தையிட்டி விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக பதிவிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் மறுப்பளித்ததுடன் தையிட்டி விகாரை தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டதாகவே பதிவிடப்படுமென குறிப்பிட்டார்.
இதேவேளை இவ் விகாரை அமைத்தது பிழையெனவும், குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணி உரிமையாளருக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னர் விகாரை அமைந்திருந்த காணியை வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஏற்கனவே விகாரை அமைந்துள்ள காணியில் மக்கள் மீள வதிய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அபிவிருத்திக் குழுத் தலைவரின் யோசனைக்கு எதிர்ப்பை முன்வைத்தார்.
Be First to Comment