தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்! – என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைச் சுட்டுப் படுகொலை செய்வதற்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
சமகால அரசியல் சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்படும் இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாகவும்இ வலுவான குரல் கொடுத்து அரசியல் தளத்தில் போராடிவரும் சகோதரர் கஜேந்திரகுமார் மீதான இக்கொடுந்தாக்குதல் இலங்கை இனவாத அரசின் கோழைத்தனத்தையும்இ கோரமுகத்தையுமே மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.
நெஞ்சில் தீரத்துடனும் நேர்மை அறத்துடனும் சமரசமின்றி தமிழீழ விடுதலைக் குரலாக இலங்கை நாடாளுமன்றத்திலேயே ஓங்கி ஒலித்தவரும் தேசியத்தலைவரால் மாமனிதர் என்று போற்றப்பட்டவருமான ஐயா குமார் பொன்னம்பலம் அவர்களைக் கடந்த 2000 ஆம் ஆண்டில் அரசக் கைக்கூலிகள் மூலம் சுட்டுப்படுகொலை செய்தது இலங்கை இனவெறி அரசு. தற்போது தந்தையைப் போலவே சமரசமற்ற அரசியல் தலைவராகத் திகழ்கின்ற அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் திரைமறைவில் அழித்தொழிக்கும் இலங்கை இனவெறி அரசின் சதிச்செயலே இக்கொலைமுயற்சி நிகழ்வாகும்.
ஈழத்தில் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு இலட்சம் மக்களுக்கான நீதியைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் இன்னமும் பெறமுடியாமலும் இலங்கை இனவாத அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்த தகவல்களை அவர்களது குடும்பத்தினருக்கு இன்றுவரை பெற்றுத்தரமுடியாமலும் கடுந்துயரத்தோடும் காயம் சுமந்த கண்ணீரோடும் கையறு நிலையில் ஈழத்தில் தமிழினம் தவித்துவரும் நிலையிலும் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறி அடக்குமுறைகள் இன்னும் நின்றபாடில்லை என்பதை இக்கொடுந்தாக்குதலின் மூலமாவது பன்னாட்டுச்சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் கடும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு தமிழ் மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பசியும்இ பட்டினியுமாக வாழ வழியற்று நிற்கும் நிலையிலும் அணுவளவு உரிமையும் தமிழர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளார்கள் என்பதை உலக வல்லாதிக்க நாடுகள் இப்போதாவது அறிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் எத்தனை ஆட்சி மாறினாலும் எத்தனை சிங்கள ஆட்சியாளர்கள் மாறினாலும் அவர்கள் எத்தனை நல்லெண்ண நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினாலும் அவை ஒருபோதும் தமிழர் நலனுக்கு ஒரு சிறிதும் உதவப்போவதில்லை என்பதையும் தமிழரது உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சிங்களர்களது இனவெறி மனப்பான்மை மாறப்போவதில்லை என்பதையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஈழத்தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கத் துணைநின்ற உலக நாடுகள் இனியாவது உணரத் தளைப்பட வேண்டும்.
தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே படுகொலைசெய்ய முயலுமென்றால் ஈழத்தில் வாழ்கின்ற பாமர மக்கள் என்ன உரிமையைக் கோரி இலங்கை இனவெறி அரசிடம் பெற்றுவிட முடியும் என்பதை இந்தியா உட்பட உலக நாடுகள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் தனித்தமிழீழம் மட்டுமே அம்மக்களுக்கான நிரந்த தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர முடியும்.
ஆகவே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீதான இலங்கை இனவாத அரசின் புலனாய்வுத் துறையினர் நடத்தியுள்ள கொலை முயற்சி தாக்குதலுக்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்து அவருக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கிடவும் இலங்கை அரசினை எச்சரித்துஇ வலியுறுத்திட வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தனித்தமிழீழம் எனும் உண்மையான அரசியல் உரிமையைப் பெற்றிட கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
Be First to Comment