Press "Enter" to skip to content

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசவாதம்

03.06.2023

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு நீர் வழங்க கூடாது என சாள்ஸ் எம்.பி பிரதேச வாதம்; திலீபன் எம்.பி குற்றச்சாட்டு –

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு நீர் வழங்கக் கூடாது என்ற பிரதேசவாத சிந்தனையை சாள்ஸ் எம்.பி கைவிட வேண்டும் என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

புளிக்குளம் புனரமைப்பு தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையோரமாகவுள்ள புளிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்நகர் மக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த குளத்து நீரை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அந்நீரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வழக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வினோதரராலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளனர்.

குறித்த குளத்தை புனரமைத்து நீர் விநியோகிப்பதற்கான அனுமதிகள் அனைத்தும் பெற்று வேலைகள் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பிரதேச வாதம் பேசி செயற்படுவதை ஏற்க முடியாது.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தான் வாழ்கிறார்கள் எனபதை தேசியம் பேசி பிரதேச வாதத்துடன் செயற்படும் சாள்ஸ் எம்.பி புரிந்து கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்னகர் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர்.

அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் எல்லையோர குளமான குறித்த புளிக்குளத்தை புனரமைத்து அதில் இருந்து அந்த மக்களுக்கு நீர் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை சாள்ஸ் எம்.பி தெளிவுபடுத்த வேண்டும்.

குறித்த குளத்தின் கீழ் முல்லைத்தீவில் வயல் நிலங்கள் இல்லை என்பதுடன் இவ் நீரை முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஏது நிலையும் இல்லை. இதனால் வீணாக போகும் நீரை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.

அதை விடுத்து இனவாதம், பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை கூறுபோட்டு சுயநல அரசியல் லாபங்களுக்காக செயற்பட்டு அபிவிருத்தியை குழப்பக் கூடாது எனத் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *