யாழ்ப்பாணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது, காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில், இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி காவல்துறைக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
மருதங்கேணி பகுதியில், கடந்த 2ஆம் திகதி, மக்கள் சந்திப்பில், ஈடுபட்டிருந்தபோது, காவல்துறை அதிகாரி ஒருவர், துப்பாகியைக் காண்பித்து தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களிலும், பகிரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய, விசாரணைக்காக, மருதங்கேணி காவல்துறைக்கு இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில், நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் இன்று தமது காரியாலயத்தில் முன்னிலையாக உள்ளதாக, அறியப்படுத்தப்பட்டுள்ளதென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
அதேநேரம், சாதாரணதரப் பரீட்சைக் கடமைகளின் நிமிர்த்தம், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்துள்ள ஏனைய இரு அதிகாரிகளும், பிறிதொரு தினத்தில் முன்னிலையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Be First to Comment