இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தொடருக்கான சிட்னி சென்றிருந்தபோது, பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் மூன்று குற்றச்சாட்டுகளை மீள பெற்ற பிறகு, அனுமதி இல்லாமல் உடலுறவு கொண்டமை தொடர்பான ஒரு குற்றச்சாட்டை 32 வயதான தனுஷ்க எதிர்கொள்கிறார்.
மீதமுள்ள குற்றச்சாட்டில் தான் நிரபராதி என தெரிவித்து தனுஷ்க மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். எவ்வாறாயினும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2022 நவம்பரில் டிண்டரில் அறிமுகமான 29 வயது பெண்ணை சந்தித்து, சிட்னியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் அப்பெண்ணை மூச்சுத்திணறல் செய்து ஆணுறை இல்லாமல் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதன்படி, கைதுசெய்யப்பட்டு அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தினசரிக்கு பதிலாக வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே காவல்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்று தனுஷ்க தனது பிணை நிபந்தனைகளை தளர்த்த முயற்சிக்கிறார்.
தனது சேவை பெறுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டுள்ளதால் கடுமையான பிணை நிபந்தனைகளை தளர்த்துமாறு அவரது சட்டத்தரணி அலென் சாஹினோவிக் வாதிட்டார்,
2022 நவம்பர் இல் முதலில் பிணை வழங்கப்பட்டபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த தனுஷ்கவுக்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும், பின்னர் வட்ஸ்அப் பயன்படுத்தவும் இரவில் வெளியே செல்லவும் தனுஷ்கவுக்கு அனுமதிக்கும் வகையில் கடந்த பெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனை மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment