Press "Enter" to skip to content

மூன்று பிள்ளைகளின் தாயை கடத்திச்சென்று 6 மாதங்களாக சிறைவைத்த சந்தேகநபர் கைது!

மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதான பெண்ணொருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் மீன் வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை, கம்புறுபிட்டிய, மஸ்தகமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

மீன் வியாபாரியின் அச்சுறுத்தலில் சுமார் 6 மாதங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த மூன்று பிள்ளைகளின் தாயை காவல்துறையினர் மீட்டதுடன், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, பின்னர் அவரை வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தான் அங்கிருந்து தப்பித்தால் தனது கணவன் மற்றும் பிள்ளைகளை கொன்று விடுவதாகவும், நிர்வாண காணொளிகளை எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும் சந்தேகநபர் தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

தலைமுடி கத்தரிக்கப்பட்டு தான் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அந்த பெண் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

குறித்த பெண்ணின் தாய், பல தடவைகள் பல காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்த போதிலும் சாதமான பதில்கள் கிடைத்திருக்கவில்லை.

இறுதியாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் சஜீவ மெதவத்தவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து இது குறித்த விசாரிக்கும் பொறுப்பு மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி வருணி போகஹவத்தவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிரகாரம், அவரும் அவரது குழுவினரும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் உத்தரவைப் பெற்று, சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அதன்போது, குறித்த பெண்ணை அச்சுறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 5 மீன் வெட்டும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவரது நிர்வாண காட்சிகள் பதிவாகியிருந்த கைபேசி மற்றும் மெமரி அட்டைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் இளம் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காணொளிகளும் குறித்த கைபேசியில் இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

36 வயதுடைய சந்தேகநபர், மேற்படி மூன்று பிள்ளைகளின் தாயாரின் உறவினர் எனவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *