புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
குறிப்பாக பிரபாகரனின் மரபணு (டி.என்.ஏ) பரிசோதனை, பிரேத பரிசோதனை அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருப்பதாக குற்றஞ்சுமத்தப்படுகிறது.
இதனைக் காரணங்கட்டி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், அதனை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இவ்வாறான நிலையில், பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன கோரியுள்ளார்.
பிரபாகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் பெறப்பட்டன? என்பது தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி இந்த தகவலறியும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகத்துக்கு தான் இந்த விண்ணப்பித்தை அனுப்பி வைத்திருந்ததாக ஊடகவியலாளர் மிதுன் கூறுகிறார்.
“தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று குறிப்பிட்டு இலங்கை இராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை நிராகரித்துள்ளது.இலங்கை தகவலறியும் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர் மிதுன் தெரிவித்தார்
Be First to Comment