Press "Enter" to skip to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் நோக்கம் சாத்தியப்படுமா?

ரொஷான் நாகலிங்கம்
+++++++++++++++++++++
தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறை  மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது.  அதுதான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும்.  பிராந்திய வல்லரசாக இருக்கட்டும், சர்வதேச நாடுகளாக இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கட்டும், நமது மக்களாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கோருகிறார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட என்று தெரிவித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன்,தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு  வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியன திடீரென சில கட்சிகளையும் இணைத்து தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததன் பின்னணி என்ன?

கடந்த காலங்களில்  தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயலாற்றி வந்தோம்.  அப்படியான அனைவரையும்  உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான கட்டமைப்பாக வரையறுத்து பொது சின்னத்தின் கீழ் பதிய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக அமைந்திருந்தது. இது எங்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாக இருந்தது.ஆனால் ஒரு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்த பொழுது, எம்மோடு ஒருமித்து செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க முடிந்தது.தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடமாக ஒருமித்து செயலாற்றியதன் பின்னணியே தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.
2   கேள்வி:தமிழ் கட்சிகளின் ஐக்கியமின்மை தமிழர்களுக்கு பாதகமென விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து… 

பதில்:நமது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் இந்த ஒற்றுமையின்மை என்பது பெரிய தாக்கத்தை செலுத்துகிறது.  தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறை  மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது.அதுதான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும்.பிராந்திய வல்லரசாக இருக்கட்டும், சர்வதேச நாடுகளாக இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கட்டும், நமது மக்களாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கோருகிறார்கள்.அது நியாயமான கோரிக்கையும் கூட.குறிப்பாக தென்னிலங்கை தரப்புக்கள் தமிழ் தரப்புகளை ஒன்றாக இணைந்து வருமாறு நையாண்டித்தனமான கோரிக்கையை கடந்த காலங்களில் முன் வைத்தனர்.இது நீடிக்குமானால் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவது சிரமமானதாகிவிடும்.

3. கேள்வி:உங்களது கூட்டமைப்பு மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டுடன் செல்லப் போகின்றது? 

பதில்:தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூறி வருகின்றனர்.இதற்காக பல போராட்டங்களையும் மக்கள் நடத்தி வந்துள்ளனர்.அதற்கு செவி சாய்த்து நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்பை பலமான கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்கிறோம்.தேர்தல் நோக்கங்களை தாண்டி இது தமிழ் மக்களினுடைய பொது தேசிய இயக்கமாக பரிமாணம் அடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.அதை மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

4   கேள்வி:அண்மையில் யாழ்.வந்த இந்திய இணையமைச்சரிடம் உங்கள் கூட்டிலுள்ள கட்சி தலைவர்கள் இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டமைக்கு காரணம் என்ன? 

பதில்:கடந்த காலங்களில் இந்திய அரசினால் உத்தியோபூர்வமாக முன்வைக்கப்பட்ட அழைப்புக்கள் தமிழ்த் தரப்பால் சரியான முறையில் கையாளப்பட்டு இருக்கவில்லை.இந்திய அரசு தமிழ்  மக்களுடன் கொண்டிருக்கும் அரசியல் உறவில் சில எதிர்மறையான அதிர்வலைகளை இது ஏற்படுத்தி இருக்கிறது.  மேலும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினையில் இந்திய பங்களிப்பு மிக அவசியமானது.நமது மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.அதில்  இந்தியாவினுடைய தலைமையை வலியுறுத்தியுள்ளோம்.இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் இந்த கோரிக்கையை  நாங்கள் முன்வைத்தோம்.

5  கேள்வி:அரசாங்கம் வலி.வடக்கில் காணி விடுவித்துள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் அவரை நேரடியாக சந்தித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி சகல கட்சிகளையும் அழைத்த பொழுதும் நாம் அதில் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.அதற்கு பிரதானமானது காணி விடுவிப்பு கோரிக்கை.அதை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன் வந்துள்ளார்.ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் மிகக்குறைவானவை.இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றன.  இது மாத்திரம் போதாது.மற்ற காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
6. கேள்வி: வெளிநாட்டு தூதுவர்களை உங்கள் அணியினர் சந்தித்து எவ்வாறான விடங்களை முன்வைத்து வருகிறீர்கள்? 

பதில்:நமது தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சர்வதேச நீதிப் பொறிமுறை,  அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி  என்பவற்றிற்கான சர்வதேசத்தின் உறுதியான ஆதரவை பெற்றுக் கொள்ளவே அவர்களோடு நாங்கள் பேசுகிறோம்.மாறிவரும் அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் தொடர்ந்தும் சர்வதேச ஆதரவு தமிழ் மக்கள் பக்கம் அல்லது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம்  இருக்க வேண்டும் என்பதே எங்கள் பேசு பொருளாக அமைகிறது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *