Press "Enter" to skip to content

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவை வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைக்கும் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களை பாதுகாப்புப் படையினர் கையாண்ட விதம் தொடர்பில் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தின் தலைவர்கள் கைது, நகைச்சுவை நிகழ்ச்சிகளின் போது பேசியதற்காக ஆட்கள் கைது, போராட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கைது போன்றன குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள கலந்துரையாடல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர், தொல்லியல், , பாதுகாப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக காணி சுவீகரிப்புகளை நிறுத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் பாராட்டியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய நியமனங்கள் துரிதமாக நடைபெற வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதி உயர்ஸ்தானிகர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அல்லது அதுபோன்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான திட்டங்களை அறிவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முக்கிய குழுவும் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடருக்கான பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

கனடா, மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேர்தல் முறைமைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதுடன் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை தனது பிரதி ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர்கள் தமது அறிக்கையில் காட்டியுள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *