ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் அந்த நாட்டில் செயற்படும் வாக்னர் ஆயுதக்குழு, முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளார்.
வாக்னர் ஆயுதக்குழுவினர் முன்னதாக ரஷ்ய தரப்பினருடன் இணைந்து யுக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்தினரால் தங்களது படையினர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக வாக்னர் படையின் தலைவர் ப்ரிகோஜின் தெரிவித்தார்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளதாக வாக்னர் ஆயுதக்குழுவின் தலைவரான ப்ரிகோஜின் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில், நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தி விளாடிமிர் புடின், வாக்னர் ஆயுதக்குழுவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக வாக்னர் ஆயுதக்குழுவின் தலைவர் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யுக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டோன் நகரை கைப்பற்றியதாக வாக்னர் ஆயுதக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், பொது மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரோஸ்டோவ் மற்றும் மொஸ்கோ ஆகியவற்றுக்கு இடையே உள்ள வோரோனேக்கில் உள்ள இராணுவ வசதிகளை வாக்னர் படையினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், வாக்னர் துருப்புகள் ரஷ்ய தலைநகரை நோக்கி நகர்வதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
நேற்றிரவு முதல் ரஷ்யாவில் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளதுடன், பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இணைய வசதிகள் துண்டிப்படைந்துள்ளன.
இதேவேளை, வாக்னர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பெலாரஸ் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்னர் படையினரின் செயற்பாடு பெலாரஸூக்கும் அச்சுறுத்தலாக அமையும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் பெலாரஸ் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் விமானம் ஒன்று துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவுக்கும் இன்று அதிகாலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த விமானம் அங்கு தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Be First to Comment