வடமராட்சி வல்லை பகுதியில் அண்மையில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய இளைஞர் ஒருவருடையதாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வல்லை- தொண்டைமானாறு வீதியில் அருகே உள்ள வெற்றுக்காணி ஒன்றில் கடந்து 22 ஆம் திகதி உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு இருந்தது. இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சடலம் அச்சுவேலியை சேர்ந்த 22 வயதான இளைஞனுடையதாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
காணாமல் போயுள்ள அந்த இளைஞன் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்.
விடுவிக்கப்பட்ட பின்னர் தனது நண்பர்கள் 4 பேருடன் வல்லை வெளியில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். அவர் உயிரிழந்ததும், நண்பர்கள் சடலத்தை கொண்டு வந்து ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவருடன் 4 பேர் கூடச் சென்றதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
Be First to Comment