ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது.
போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள ஆடியோவில், “ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள்.
கிளர்ச்சியாளர்களுக்கான பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டதால், ரஷ்யா முழுவதும் வாக்னர் போராளிகளின் இயக்கத்தை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, போராளிகள் உக்ரைனில் தங்களின் கள முகாம்களுக்கு பின்வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவுக்கு முன்னேற, 200 கிலோமீட்டர்கள் (120 மைல்) தொலைவே இருந்த நிலையில், வாக்னர் ஆயுதக் குழு பின்வாங்கி இருப்பது அதிபர் புதினுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழு தலைவர் அண்டை நாடான பெலாரசுக்குச் செல்கிறார். அவர் மீதான கிரிமினல் வழக்கு முடித்து வைக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ரஷ்யாவில் ஏற்பட இருந்த ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Be First to Comment