பல தடவை உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வந்த போதும் நீங்கள் செய்யும் மக்கள் சேவை தான் உங்களை காப்பாற்றியுள்ளது என கிராம அலுவலர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(25.06.2023) இடம்பெற்ற மாவட்ட கிராம அலுவலர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதன் போது மேலும் தெரிவித்த கிராம அலுவலர், தமிழ் மக்களின் இக்கட்டான காலங்களில் பல சேவைகளை ஆற்றியுள்ளீர்கள். ஆதலால் தான் உயிர் அச்சுறுத்தல்கள் வந்த போதும் நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள்.
நிரந்தர கடமைப்பட்டியல்
கிராம சபையாளர்கள் என்ற வகையிலே எங்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளது. அதனை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.
அரசாங்கத்தில் இருந்து வரும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய அலுவலர்களாக கிராம சேவையாளர்கள் காணப்படும் நிலையில் எங்களுக்கான நிரந்தர கடமைப்பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
ஒரு வருடத்தில் காகிதாகி செலவுக்காக 1500 ரூபாய் கொடுக்கப்படுகிறது. குறித்த நிதியில் தான் தும்புத்தாடி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாங்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நிதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எமது அலுவலகத்திற்காக அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் நிதியானது தற்போதைய சூழ்நிலையில் போதாமை காரணமாக எமது சம்பளத்தில் இருந்தே கட்டட வாடகைப் பணத்தையும் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே அமைச்சரவை அந்தஸ்சு உள்ள அமைச்சர் என்ற வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை அரசாங்கத்துடன் பேசி தீர்வு பெற்றுத்தர வேண்டுமென கிராம அலுவலரால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment