Press "Enter" to skip to content

தமிழ் நாட்டுக்கு தமிழ் எம்பிக்கள் சொன்று எடுத்துரைப்பார்களாக இருந்தால் கடற்றொழிலாளர்களது பிரச்சினை பெரும்பாலும் தீரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

வடக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழ்நாட்டு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அண்ணாமலை மற்றும் தமிழ்நாட்டு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து  தமிழ்நாட்டு இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை மீறி வந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்ற விடயம் தொடர்பாக எடுத்துக்கூற வேண்டும் என தெரிவித்தள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்வாறு தமிழ் எம்பிக்கள் சொல்வார்களாக இருந்தால் இப்பிரச்சினை பெரும்பாலும் தீரும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

தமிழ்நாட்டு இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை மீறி வந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்றனர். இது எங்களுடைய மக்களின் வளங்களை அழிக்கின்றது. எங்களுடைய மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கின்றது. எங்களுடைய மக்களின் கடல் தொழில் உபகரணங்கள் போன்றனவை அழிவடைகின்றது

மேலும், நான் ஒரு அமைச்சராக இருந்த போதும் அமைச்சராக இல்லாத போதும் மூன்றுதடவை தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்களையும் ஈழத்து கடற்தொழிலாளர்களையும் கச்சதீவிலே சந்தித்து பேச வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்கள் எங்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுகின்றனர். அதேவேளை தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் தங்களுக்கு 1 வருடம் தாருங்கள் 2வருடம் தாருங்கள் என கால அவகாசம் கேட்கின்றனர்.

மேலும் இது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் போது தமிழ்நாட்டில் பலத்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் இவற்றை கடற்படையின் பிரச்சனையாக காட்டப் பார்க்கின்றார்கள்

இந்நிலையில், வடக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழ்நாட்டு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அண்ணாமலை மற்றும் தமிழ்நாட்டு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக எடுத்துக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தமிழ் எம்பிக்கள் சொல்வார்களாக இருந்தால் இப்பிரச்சினை பெரும்பாலும் தீரும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வடக்கைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை சந்திப்பதற்கு விரும்புகிறார்கள். குறித்த செயற்பாட்டை இலங்கை கடற்படை தடுக்கலாம் அல்லது இந்திய கடற்படை தடுக்கலாம். தடுத்தலால் அவர்கள் சில வேளை கைது செய்யப்படலாம் அல்லது திருப்பியனுப்பப்படலாம்   இந்நிலையில் அதற்கு மாற்றீடாக  பலாலியில் இருந்து சென்னை செல்வதற்கு ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும் அதற்கு மக்களிடம் உண்டியல் மூலம் பணம் சேகரிக்கப்படுவதாக கேள்விப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *