முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (13.09.2023) 7ஆம் நாள் அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.
ஏழு நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரம்
இன்றைய அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,
“கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன.
இந்தப் புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட
அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, சில நாட்களில் ஓரிரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளையே அகழ்ந்தெடுக்க முடிகின்றது.
குறித்த மனிதப் புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகளையும், தடயப் பொருட்களையும் எடுத்தாலே, இது தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். எனவே, அகழ்வாய்வுப் பணிகளின் காலத்தை வரையறுக்க முடியாதுள்ளது.
57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு
ஏற்கனவே அகழப்பட்டுள்ள குழியிலிருந்து மனித எச்சங்களையும், தடயப் பொருட்களையும் முழுமையாக அகழ்வாய்வு செய்து எடுப்பதற்கு ஒரு சில வாரங்கள் நீடிக்கலாம் என நினைக்கின்றேன். அதனைவிட இன்னும் மேலதிகமாக குழியைத் தோண்டி அகழ்வாய்வுகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் எனக் கூறமுடியாது.
இந்தப் புதைகுழி தொடர்பிலான அறிக்கைகள், அகழ்வாய்வு செய்யும் குழுவினரால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும். அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயப் பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பிரேத சாலையில் விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாய்வுக்கென 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி புதைகுழிக்குரிய தகரப் பந்தல், தங்குமிட வசதி, மலசலகூட வசதி உள்ளிட்ட விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இருக்கின்ற நிதி மூலத்தை வைத்து கடந்த வாரத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த வாரத்திலும் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். அடுத்த வாரமும் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமாகவுள்ளது.
தொடர்ந்து அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிவான் உத்தரவிடுவாரெனில் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.
எடுக்கப்பட்ட தகட்டிலக்கம் தொடர்பாக, அவை எந்தக் காலத்துக்குரியவை போன்ற விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம்.
குறித்த அகழ்வாய்வுகள் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா, தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் அகழ்வாய்வு இடம்பெற்ற பகுதிக்கு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment