Press "Enter" to skip to content

கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் அகற்ற நடவடிக்கை

பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டைக் குறிப்பாக இலக்குவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் சட்ட ஏற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு வினவியமைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இதில் எதிர்வரும் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்து ஆராயப்பட்டன.

எந்த சட்ட அடிப்படையில் அவ்வாறான உணவுக் கூடங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள், எந்த அடிப்படையில் அவற்றை 2027ஆம் ஆண்டு அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள் என அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பியது.

இது விடயம் தொடர்பான தகவல்களைக் கூடிய விரைவில் குழுவில் சமர்ப்பிக்குமாறு கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

துறைமுக நகரத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் தொடர்பிலும் குழு மேலும் கேள்வியெழுப்பியது.

எனவே, குறித்த ஒழுங்குவிதிக்கு அனுமதி வழங்க முன்னர் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட சகல தகவல்களையும் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.

ஸ்மார்ட் சிட்டி எண்ணக்கருவுக்கு அமைய தனியான நிலப்பரப்பில் துறைமுக நகரம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட் சிட்டியில் கழிவுநீர் முகாமைத்துவம், புதுப்பிக்கத்தக்க சக்தி, உரிய வடிகாலமைப்புக்கான பொறிமுறைகள் காணப்படுகின்றனவா என்றும் குழு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது.

கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் வடிகாலமைப்புத் தொடர்பில் நாட்டின் ஏனைய பகுதிகளில் கிடைத்த அனுபவம் துறைமுக நகரத்தை அமைக்கும்போது தவிர்க்கப்பட வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்வழங்கல் சபை போன்ற அரசாங்க நிறுவனங்கள் துறைமுக நகரின் கட்டுமானம் மற்றும் அபிவிருத்தியில் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டமையும் இங்கு தெரியவந்தது.

இவை அனைத்தும் வரி செலுத்தும் நாட்டு மக்களின் பணம் என்பதால் இதனால் நாட்டுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை என்றும் குழு கேள்வியெழுப்பியது.

இதற்கமைய துறைமுக நகரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசாங்கம் மேற்கொண்ட செலவுகளின் வகைப்படுத்தல் மற்றும் வருமானம் கிடைக்கும் மார்க்கங்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *