Press "Enter" to skip to content

சரணடைந்தவர்களை கொலை செய்து புதைத்திருக்கிறார்கள்

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (21) சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அகழப்பட வேண்டும்.

போர்க்குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டில் சமாதானம் அமைதி என்பது எட்டாத கிட்டதா ஒன்றாக இருக்கின்றது இங்கே ஆட்சி செய்கின்றவர்களுக்கு சமாதானம் என்பது தேவையில்லாத விடயமாக இருக்கின்றது.

ஆட்சிபீடம் ஏறுகின்றவர்கள் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி பௌத்த மேலதிக்க சிந்தனையுடன் பெரும்பான்மை பேரினவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறதுடித்து கொண்டிருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு தமிழ்மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வினை இனப்பிரச்சினைக்கான தீர்ப்பதற்கான எந்த வழிமுறையினையும், பொறிமுறையினையும் தேடாமல் குறிப்பாக தொடர்ச்சியாக அரசியல் செய்வதற்காக நாட்டை ஆழுவதற்காகத்தான் சமாதான முயற்சிகளில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள்.

இறுதி போரில் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தார்கள் சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம் உங்களுக்கு நல்ல வாழ்கைக்கு கொண்டு செல்கின்றோம்.

நீங்கள் எங்களிடம் சரணடையுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் இறுதி போர்க்கால பகுதியில் அறிவித்துவிட்டு சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களைத்தான் நாங்கள் இந்த கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி என்பதை விட அது ஒரு போராளிகளின் புதைகுழியாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கு சர்வதேச நிபுணர்குழுவினை கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால்தான் இந்த புதைகுழியினை தோண்ட வேண்டும் இங்குள்ளவர்களை கொண்டு பரிசோதிக்கின்ற பட்சத்தில் முடிவினை காணமுடியாது இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை கடந்த காலங்களில் இருந்து வருகின்றது

இனிவரும் காலங்களிலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் எல்லா விடயங்களிலும் சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தினால்தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் கண் திறக்கப்பட வேண்டும் வீதிகளில் புலம்புகின்ற மக்களின் குரல் அவர்களின் காதுகளுக்கு செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *