Press "Enter" to skip to content

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது. எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்பதும் பிரச்சினைக்குரியதாக உள்ளது.  நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது குடும்பத்தார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் சரத் வீரசேகர கூறினார்.

 

நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை : சாலிய பீரிஸ் தகவல்

நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை : சாலிய பீரிஸ் தகவல்

 

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நீதிசேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.  அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான் அச்சுறுத்தவில்லை..

இந்தநிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் என்னை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளதை அவதானித்துள்ளேன்.

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு | Mullaitivu Judge Saravanarajah Has Resigned

 

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.  நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நான் நீதிபதியை அச்சுறுத்தவில்லை.  நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடவும் இல்லை.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடுவது பாரதூரமானது.  நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டம் மற்றும் பாதுகாப்புத்துறை மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.  இதனை அலட்சியப்படுத்த முடியாது.

நீதிபதி குறிப்பிடுவதைப் போன்று அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருந்தால் அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். அல்லது பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்திருக்கலாம். உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தாரா என்பதை அறியவில்லை.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்வதற்காக பலர் தமக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதையே சர்வதேசத்திடம் முன்வைத்தார்கள்.  இந்தக் குற்றச்சாட்டும் புகலிடக் கோரிக்கையை நோக்கமாகக் கொண்டுள்ளதா என்பதும் பிரச்சினைக்குரியதாக உள்ளது.

எவ்வாறு இருப்பினும் நீதிபதி குறிப்பிட்ட விடயங்கள் பாரதூரமானவை.  இவ்விடயம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நீதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் சரத் வீரசேகர செயற்பட்டு வந்தமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *