Press "Enter" to skip to content

நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான விவாதம் பாராளுமன்றில்!

பாராளுமன்றத்தை எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

2023 ஒக்டோபர் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5 மணிவரை குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), மத்தியஸ்த (விசேட வகுதிளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

2023 ஒக்டோபர் 4ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5 மணிவரை சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட மூன்று தீர்மானங்கள் (2336/72, 2338/54 மற்றும் 2341/64 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டவை), விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (2332/14, 2332/53, 2337/16 மற்றும் 2340/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டவை) மற்றும் இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்புச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்று பி.ப 5 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திப்புவேளையின் போதான இரு வினாங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5 மணி வரை இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), குடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பி.ப 5 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

2023 ஒக்டோபர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ‘பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்’ நடத்தப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *