Press "Enter" to skip to content

இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் – அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும்இ அவர்களை கௌரவிக்கும் வகையிலும் ‘நாம் – 200’ நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நவம்பர் 02 ஆம் திகதிக்கு முன்னதாக காணி உரிமை தொடர்பிலும் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றேன். மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது பெருந்தோட்ட அமைச்சின் கண்காணிப்புக்கு சென்றுள்ளது, அதன்பின்னர் காணி அமைச்சுக்கு செல்லும், கடைசியாக எனது அமைச்சுக்கு வந்த பின்னர், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 2 லட்சத்து 31 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு பிரச்சினை உள்ளன. இதில் 66 ஆயிரம் குடும்பங்கள் அரச வீடு, இந்திய அரசின் வீடு அல்லது சுயமாக வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளன. எனவே, மீதமுள்ள சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் அவசியமாகின்றன. அக்குடும்பங்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.  ‘செளமியபூமி’ எனும் திட்டத்தின் கீழ் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக பத்திரம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

அதேவேளை, இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துககான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும். முழுமையான தொரு வீட்டு திட்டமாக இதனை நிர்மாணிக்க எதிர்பார்க்கின்றோம். நான் வாக்கு வேட்டை அரசியல் நடத்துபவன் கிடையாது. எமக்கு ஒரு லட்சத்து 76 வீடுகள் தேவை. தற்போது 10 ஆயிரம் தான் உள்ளன. இது விடயத்தில் அரசியல் நடத்தப்படமாட்டாது. முறையான பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவத்தின் அடிப்படையாக முறையாக வீடுகள் கையளிக்கப்படும். பயனாளிகள் பட்டியல் பொது இடத்தில் ஒட்டப்படும். எவருக்காவது ஆட்சேபனை இருந்தால், அரசியல் நடந்திருந்தால் ஆட்சேபனை முன்வைக்கலாம். மேன்முறையீட்டு குழு ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”  எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *