முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலின் பின்னணியில் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்ச்சி இருக்கலாம். அது பற்றியும் தேடிப் பார்க்க வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி முறைப்பாடு செய்திருக்க வேண்டும்
அதேபோல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் சி.ஐ.டி. ஊடாக தனியான விசாரணையை முன்னெடுத்து வருகின்றது.
தனக்கு அச்சுறுத்தல் இருந்திருந்தால் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த நீதிபதி அது குறித்து முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.
அவர் அவ்வாறு எந்தவொரு முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லை. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் தெரியப்படுத்தவில்லை.
எனவே, இங்கு பாரிய சூழ்ச்சி இருப்பது தெளிவாகின்றது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் மேற்குல நாடுகளின் இராஜதந்திரிகள் இருவரை சந்தித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
எனவே, அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினாரா அல்லது தான் செய்த குற்றங்களில் இருந்து விடுபடுவதற்காக நாட்டைவிட்டு ஓடினாரா என்பது குறித்தும் ஆராய வேண்டும்.
இங்கு சூழ்ச்சி உள்ளதா, இதன் பின்னணியில் எதிரணி தொடர்புபட்டுள்ளதா, நாட்டை அபகீர்த்திக்கு உட்படுத்தும் முயற்சியா இது என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. உண்மை கண்டறியப்பட வேண்டும்.
1988 – 1989 காலப்பகுதியிலும் நீதிபதி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறினார். எனவே, இது முதல் சந்தர்ப்பம் அல்ல. அன்று நீதிபதிகள் சாதாரண காரணத்தை வெளியிட்டனர். இவர் வெளியிடவில்லை என்றார்.
Be First to Comment