Press "Enter" to skip to content

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதே நோக்கம்

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்மார்ட்  நாடு – 2048ஐ வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், திருத்தப்பட்ட கட்சியின் புதிய யாப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒன்லைன் மூலம் அமைப்புக்களை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் நாட்டிற்கு முன், ஐக்கிய தேசியக் கட்சி ஸ்மார்ட் கட்சியாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“என்னில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற குறியீட்டை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப சகல துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்காக அரச நிறுவனங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஊழலைக் கட்டுப்படுத்த பல கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டுக்காக பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு ஸ்மார்ட்  கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *