பாலாவி – ரத்மல்யாய , முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் நேற்று (01) ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
முஹம்மது ஹனீபா பாத்திமா நிபாஸா (வயது 34) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார் என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
நேற்றிரவு 1.30 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வீட்டில் கணவனும், மூன்று பிள்ளைகளும் தூங்கிய பின்னர் குறித்த இளம் பெண் விட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, தூக்கத்திலிருந்த இளம் பெண்ணின் கணவன், திடீரென எழும்பி பார்த்த போது, அந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதுபற்றி புத்தளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.
மேலும், அங்கு வருகை தந்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்தில் மரண விசாரணையை முன்னெடுத்ததுடன் ஜனாஸாவை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குடும்ப தகராறு காரணமாக, மன உளைச்சலுக்கு உள்ளான நிலையிலேயே அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் கூறினார்.
அத்துடன், தனது மூன்று பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைக்குமாறும் உயிரிழந்த இளம் பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
மேலும், தம்பிமார் இருவரையும் நன்றாக பாரத்துக் கொள்ளுமாறும், எல்லோரும் மதிக்கின்ற ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர வேண்டும் என தனது மூத்த மகனுக்கு அறிவுறை கூறி அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ”என்னை மன்னித்து விடுங்கள்” என்று உயிரிழந்த இளம் பெண் தனது இடது கையிலும் பேனையால் எழுதியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளம் பெண்ணின் ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் , மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்பளித்து ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment