இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய இடைகால நிர்வாக குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.
இதன்படி, இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த இடைகால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது.
1973ம் ஆண்டு 25ம் இலக்க சரத்துக்கு அமைய, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, இந்த இடைகால குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாக குழுவின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க இந்த இடைகால நிர்வாக குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
அத்துடன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரொஹினி மாரசிங்க, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கணி பெரேரா, எச்.கே.உபாலி தர்மதாஸ, சட்டத்தரணி ரகித்த நிமல் ராஜபக்ஸ மற்றும் எம்.எச்.ஜமால்டீன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக படுதோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக குழு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே, இந்த இடைகால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது
Be First to Comment