Press "Enter" to skip to content

மகிந்தவால்த்தான் கூட்டமைப்பினர் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: விமலவீர திஸாநாயக்க

மகிந்தவின் புண்ணியத்தால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குகூட சுதந்திரமாக நடமாடமுடிகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளும், ஜே.விபியினரும்தான் இந்நாட்டை சீரழித்தனர். ராஜபக்சக்கள்தான் இந்நாட்டை மீட்டெடுத்தனர்.

அபிவிருத்தியில் புரட்சி செய்தனர். எல்லா வீதிகளும் ‘காபட்’ இடப்பட்டு புனரமைக்கப்பட்டன.
கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் கட்டியெழுப்பட்டன. இப்படி ராஜபக்ச யுகத்தில்தான் நாட்டுக்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன.
மஹிந்த ராஜபக்சவுக்கு முன் இருந்த தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.
எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. கடவுளும் வரவில்லை.
எமக்கு உயிர் தந்தது மஹிந்த ராஜபக்சதான். நாட்டை மீட்டெடுத்ததும் அவர்தான்.எனது கிராமத்தையும் பாதுகாத்து தந்தது மஹிந்ததான்.

அதனால் யார் என்ன கூறினாலும் நான் அவருக்கு சோரம்போவேன்.
தலதாமாளிகை தாக்கப்படும் போதும், எல்லை கிராமங்களில் தாக்குதல் நடக்கும்போதும் நாட்டை மீட்கயார் இருந்தது? அவ்வாறு மீட்ட மஹிந்த துரோகியா? எமக்கு மூச்சு தந்த ராஜபக்சக்கள் துரோகிகளா?
மரண பீதியுடன் வாழ்ந்தவர்களுக்கு உயிர் தந்தை ராஜபக்சக்களை வீரர்கள் எனக் கூறிக்கொள்ளும்சிலர் துரோகிகள் ஆக்கியுள்ளனர்.
போர் காலத்தில் இந்த வீரர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.
ராஜபக்சக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் நாட்டை மீட்டது ராஜபக்சக்கள்தான்.

கொரோனாவால் மக்கள் செத்து மடியும்போது மக்களை பாதுகாத்தது ராஜபக்சக்கள், இப்படியானவர்கள் துரோகிகளா? ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் நானும் ஈழத்தில்தான் வாழவேண்டி வந்திருக்கும்.
மஹிந்தவின் புண்ணியத்தால்தான் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணையிறவு, வவுனியா என எல்லா பகுதிகளிலும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான் என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *