Press "Enter" to skip to content

அன்று நாட்டை பொறுப்பேற்க துணிவில்லாதவர்கள் இன்று பாதீட்டை பிழைகூறிக் கொண்டிருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

இந்த நாடு எத்தகைய அரசியல், சமூக பொருளாதார வீழ்ச்சிக்கு உட்பட்டிருந்தது என்பதும், அத்தகைய நிலையிலிருந்து இந்த நாட்டினை மீட்டிட எவருமே முன்வராமல் வெறும் சாக்குப் போக்குக் கதைகளைக் கூறிக்கொண்டிருந்த நிலையில், இந்த நாட்டினை மீட்டிட முன்வந்தவர் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது குறித்து நான் பல தடவைகள் கூறியுள்ளேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள்,  நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

அன்று இந்த நாட்டினைப் பொறுப்பேற்பதற்கு துணிவில்லாதவர்கள் இன்று எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள இந்த வரவு – செலவுத் திட்டத்தினையும் எதிர்த்து, பிழைகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களால் இதை மட்டும்தான் செய்ய முடியும். அது அவர்களது அரசியல்.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த SLDU எனப்படுகின்றSri Lanka Development Update இனது Time to Reset திட்டத்தில், 2023ல் இலங்கையின் பொருளாதாரமானது நூற்றுக்கு 4.3 வீதம் சுருக்கமடையும் எனவும், கேள்விகள் தொடர்ந்தும் பின்னடைவு காணல், தொழில் வாய்ப்புகள் மற்றும் வருமான இழப்புகள் உக்கிரமடைதல் மற்றும் விநியோகத் துறையின் வரையறைகள் உற்பத்திகளை மிகவும் பாதிப்புறச் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலக் கூறுகளை நோக்கிச் செல்கின்றபோது, உலக வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரான பாரிஸ் எச். ஹதாத் – செர்வோஸின்  (Faris H.Hadad௲ Zervos) கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, 2021ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தொழில் வாய்ப்புகள் இழப்பானது அரை மில்லியனுக்கும் மேலானது. மேலும் 2.7 மில்லியன் மேலதிக நபர்கள் வறுமைக்கு உட்பட்டுள்ளனர். இதனால், இலங்கையின் பொருளாதாரமானது ஆழமான பாதிப்புக்கு உட்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலுமொரு விடயத்தை வலியுறுத்துகின்றார். அதாவது, ‘நிலையற்ற பூகோள சூழலும் நாட்டின் பொருளதார விருத்தியினை குறிப்பிட்டளவு பாதித்துள்ளது’ என்கிறார்.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒரு நாடு என்ற வகையில் நாம் தற்போதைய பொருளாதார சூழலில் இருந்து மீட்சி பெற இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *