நிலையற்ற பூகோள சூழலானது , எமது நாட்டு பொருளாதாரத்தினைப் பாதிக்கின்றது என்றால். அது எமது மக்களையும் சேர்த்தே பாதித்து வருகின்றது. எனவே அதனை நிலைபேறானதாக ஆக்க வேண்டும். அதற்கும் சேர்த்துத்தான் நானும் பாடுபட்டு வருகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள், நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
இத்தகைய சவால்கள் அனைத்துக்கும் முகங்கொடுகின்ற வகையிலேயே 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினை எமது ஜனாதிபதி தயாரித்திருக்கின்றார்.
பொருளாதாரத்தின் மீள் திருத்த ஏற்பாடுகள், தேசிய உற்பத்தியின் சரிந்த பகுதிகளை வலுவூட்டி மீளக் கட்டியெழுப்புதல், அதன் மூலமான வேலைவாய்ப்புகள் என்பன இங்கு முதலிடம் பெறுகின்றன.
இந்த வரவு – செலவுத் திட்டத்தின் பெறுபேறுகளை எமது மக்களின் நலன்களுக்கென நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம் என்பதில்தான் அனைத்தும் தங்கியிருக்கின்றன.
எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் இதுவரையில் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் எவ்வாறு பயன்மிக்கதாக எமது மக்களுக்கு சாதகமாக்கிக் கொடுத்து வந்துள்ளோமோ, அவ்வாறே இந்த வரவு – செலவுத் திட்டத்தினையும் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.
இங்கு நாங்கள் மட்டுமல்ல. எமது மக்கள் வாக்களித்துள்ள, அல்லது எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொண்டுள்ள ஏனையோருக்கும் இந்த கடப்பாடு இருக்க வேண்டும். மக்கள் அவர்களிடமும் போய் பிரச்சினைகளைக் கூறித் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாவிட்டால் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment