Press "Enter" to skip to content

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் திடீரென நுழைந்த சிவசேனை அமைப்பினர்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தை தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆலய பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், ஆலய பக்தர்கள்,  வேலன் சுவாமிகள், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்தோர் என பலரும் கலந்து கொண்டு கூட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, ஆலய நிர்வாகத்தின் அழைப்பின்றி சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், விபுலானந்த சுவாமிகள் உள்ளிட்ட ஒரு குழுவினர் அங்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினர் குருந்தூர் மலை விகாராதிபதியை இரகசியமாக சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி, மக்கள் குறித்த குழுவினரை வெறியேறி நிர்வாகத் தெரிவுக்கு ஒத்துழைக்குமாறு கோரினர்.

அத்துடன் சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு இடம்பெறமாட்டாது எனவும், வெடுக்குநாறி மலையில் பல பிரச்சனைகள் நடந்தும் சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும் மக்கள் தெரிவித்ததுடன், அவர்களை வெளியேறுமாறு கோரினர்.

எனினும், சிவசேனை அமைப்பினர் வெளியேறாமையால் ஆத்திரமடைந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பக்தர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன், ஒரு வருடத்திற்கு தற்போதைய நிர்வாக சபையே தொடர்ந்து இயங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். மக்கள் சென்ற பின்னும் சிவசேனை அமைப்பினர் பொது நோக்கு மண்டபத்தில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *