ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் புதிய ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்ய அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளதாகவும் அது மக்களுக்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை உருவாக்கும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனநாயக கட்டமைப்பிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கான அதிகார பரிமாற்றம் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக நடைபெற வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செப்டம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பார் என பிரதமர் சூசகமாக வெளியிட்ட ஊகம் பரவி வருவதாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகத் தெரிவித்த குமாரப்பெரும, இந்த தருணத்தில் அவ்வாறு செய்தால் அது மிகவும் நேர்மையற்ற செயலாகும் என்றார்.
“அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். புதிய ஜனாதிபதிக்கு இதுபோன்ற சூழ்நிலையில் பல விதிகள் உள்ளன. எனினும் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு ஜனநாயக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்கள் அதனால் பாதகமாக பாதிக்கப்படக் கூடாது, அவ்வாறு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தால், அது அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் மிகவும் நேர்மையற்ற செயலாகும்” என அவர் தெரிவித்தார்
Be First to Comment