அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆடையுடன் தொங்கு பாலத்தில் பயணித்தார் . தற்போதைய ஜனாதிபதி ஆடையில்லாமல் தொங்கு பாலத்தில் பயணிக்கின்றார் இதுதான் இவர்களின் மாற்றம் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கபீர் ஹாசிம், வணிக கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஆடை அணிந்து கொண்டா கைச்சாத்திட போகிறது எனவும் கேள்வி எழுப்பினார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி மெழுப்பிய அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி சார்பில் இம்முறை பாராளுமன்றத்துக்கு பெருமளவிலான கலாநிதிகள், பேராசிரியர்கள், பட்டதாரிகள் மற்றும் தொழிற்றுறை நிபுணர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் 74 ஆண்டு கால அரசியல் கட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு இலவச கல்வியின் ஊடாக பயனடைந்தவர்கள்
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தில் முறைமை மாற்றம் எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. பாரம்பரிய விவசாய முறைமை தவறு என்றால் கூட்டு விவசாய முறைமைக்கு செல்ல வேண்டும். அதேபோல் கைத்தொழில் துறை தவறு என்றால் அரச கட்டமைப்புடனான கைத்தொழில் துறைக்கு செல்ல வேண்டும்.
ஜனாதிபதியின் கொள்கை உரையிலும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கணக்கு வாக்கு பதிவில் மாற்றம் ஏதும் கிடையாது. நாட்டில் முறைமை ஏதும் மாற்றமடையவில்லை. அநுரவே மாற்றமடைந்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டவர்கள் இன்று செயற்திட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராயாமலே செயற்திட்டங்களை அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள்
Be First to Comment