இலங்கையில் தமிராய் பிறந்தது நாம் செய்த பாவமா எனவும் காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் விடயத்தில் அதற்கான தீர்வினை யாரிடம் நாம் கோருவது எனவும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
15 வருடங்களாக எங்களுடைய துயரங்களையும் துன்பங்களையும் ஊடக வாயிலாகவும் கவனயீர்ப்பு போராட்டமாகவும் ஆர்ப்பாட்டங்களாகவும் ஏதோ ஒரு வகையில் அறியத்தந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும் எங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.
எங்களுடைய உயிர்களை கொடுத்துவிட்டு வீதியில் நின்று போராட்டம் செய்கிறோமே தவிர அரிசிக்கோ பருப்புக்கோ போராடவில்லை.
நட்டஈட்டிற்காக நாங்கள் இதுவரை போராடவில்லை.
இனிமேலும் போராடப் போவதில்லை. எங்களுடைய பிள்ளைகளை விசாரணைக்காக கூட்டிச் சென்றவர்கள், அவர்களுக்காகத்தான் இந்த போராட்டமே தவிர இழப்பீட்டிற்காக அல்ல.
உண்மையைக் கண்டறிந்து சர்வதேசம் எமக்கான தீர்வினை தர வேண்டும்.
OMP அலுவலகமும் உண்மையை கண்டறியவும் இல்லை எங்களுக்கான நீதியை பெற்றுத்தரவும் இல்லை.
OMP அலுவலகமும் நட்டஈட்டினையே வழங்கிக்கொண்டிருப்பதால் எமக்கு அது தேவையில்லை என்பதையே நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
இதற்கு அரசியல்வாதிகளும் பக்கத்துணையாக செயற்படுகிறார்கள்.
ஏனெனில் நாங்கள் OMP வேண்டாம் எனும்போது அரசியல்வாதிகள் இதனை கொண்டு வந்தார்கள்
அவர்களிடம் நாங்கள் எமது பிள்ளைகளை தொலைத்த சாட்சிகளை கொடுத்த போது அவர்கள் சாட்சிகளைத் தொலைத்து விட்டார்கள்.
இதை நாம் யாரிடம் போய் சொல்வது எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்திக் கொண்டு இருக்கம் போது கூட சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்கவில்லை.
நாங்களும் எமது பிள்ளைகளும் தமிழர்களாக பிறந்தது பாவமா? குற்றவாளி என பிடித்துச் சென்றால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்.
நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தவில்லை. பின்ளைகளும் இல்லை என்றால் எங்கே போவது? சர்வதேசம் எம்க்கு ஒரு நீதியைப் பெற்றுத் தரவேண்டும்.
சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்க வேண்டும்.
தமிழனாக பிறந்ததால் இந்த நாட்டில் வாழ முடியாது எனில் எம்மையும் வேறு நாட்டிற்கு எடுத்து விட்டு ஒரே சிங்கள இனமாக இந்த நாட்டை ஆளுங்கள் என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்
Be First to Comment